புதன், 24 பிப்ரவரி, 2010

மை நேம் இஸ் கான்

மை நேம் இஸ் கான்.
அன்பிற்கான பயணம்.

9/11 க்கு பிறகு அதைப்பற்றி நிறையவே படங்கள் வந்துவிட்டது, ஆனால் திரையிடப்பட்ட அமெரிக்காவில் மிகுந்த வரவேற்பை பெறும் அளவிற்க்கு என்ன இருக்கிறது? என்ற எதிர்பார்ப்பு தான் இந்த படத்தை பார்க்க தூண்டியது.

கதை என்ன?
 கதை நாயகன் ஆட்டிசம்(Autism) என்னும் நோயால் பாதிக்கப்பட்டவன் மஞ்சள் நிறம், புது இடங்கள் செல்வது என்றால் பயம். இத்தகைய குறைபாடு கொண்ட சாதாரண மனிதன் அமெரிக்க அதிபரை சந்திப்பதற்காக தன் குறைகளை தாண்டி நீண்ட பயணம் மேற்கொள்கிறான். எது அவனை அவ்வாறு தூண்டியது?. அதில் அவன் வென்றானா?

9/11 க்கு பிறகு உலகமே இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பார்க்கிறது என்றாலும், அப்பாவி அமெரிக்கவாழ் இஸ்லாமியர்கள் எத்தகைய வெறுப்பிற்கும், பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள் என்பதை இரத்தம் இல்லாமல், அதிக சத்தம் இல்லாமல் பொட்டில் அறைந்தற்போல் சொல்கிறது படம்.

அமெரிக்க அதிபரை சந்திச்சி என்ன சொல்ல போறே? என்ற விமான நிலைய சோதனை அதிகாரியின் நக்கலான கேள்விக்கு, என் பெயர் கான், நான் தீவிரவாதி இல்லை னு சொல்லப்போறேன் என்கிற அசாதாரண பதில் நம்மை அட? என நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

இடைவேளை வரை கதை ஒரு தெள்ளத்தெளிவாக நீரோடை போல போகிறது. இடைவேளைக்குப்பின் நிறைய விஷயங்களை சொல்லவேண்டிய அவசியத்தால் குழப்பம் அடைகிறது. ஊடகங்கள் சாதாரண மனிதனை ஹீரோவாக்கும் முயற்சியில் சினிமாத்தனம் தெரிகிறது.
கோபத்தில்  துரத்திய மனைவி புரிந்துகொண்டு தேடி வரும்போதே கதை முடிந்து விடுகிறது. அதன் பிறகு திடீர் கத்தி குத்து என்று தொடங்கிய இடத்திலேயே கதையை முடிக்கவேண்டிய இயக்குநரின் முயற்சி நமக்கு அயர்ச்சியை எற்பதுத்துகிறது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மனிதனின் மேனரிஸம், அன்பு வெளிப்பாடு, தன்நம்பிக்கை என்று அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்துகிறார் ஷாருக்கான்,
காதல் மனைவியாக, நியாயம் கிடைக்கும் வரை போராடும் பாதிக்கப்பட்ட தாயாக கஜோல் நடிப்பில் நல்ல முதிர்ச்சி.
சாதாரண கிராமத்து தாயாக,குறை இருந்தாலும் தன் மகன் புத்திசாலி என்று ஆசிரியரிடம் வக்காலத்து வாங்கும், கோட்டு சித்திரம் போட்டு இதில் யார் இந்து? யார் இஸ்லாமியன்? என்று கேள்வி கேட்டு  விளக்கம் சொல்லும் முழு அன்பின் வெளிப்பாடாக ஷாருக்கான் அம்மாவாக வருபவர் ஜொலிக்கிறார். சாதாரண மனிதர்களாய் நம் மனதுடன் பொருந்துகிரார்கள்.

ஹிந்தி படத்தில் பஞ்ச் டயலாக் இருக்காது என்று யார் சொன்னது. இந்த படத்தில் உண்டு.
நல்லவன் நல்லதையே செய்வான், கெட்டது செய்பவன் கெட்டவன்
என் பெயர் கான், நான் தீவிரவாதி இல்லை போன்ற பஞ்ச் டயலாக் அடிக்கடி வந்து நம் மனதை பஞ்ச் செய்கிறது.
ஒவ்வொரு இஸ்லாமியனும் நான் ஒரு இஸ்லாமியன், நான் தீவிரவாதி இல்லை என்று சொல்லவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டனர்  என்று நினைக்கும் போது மனது கனக்கிறது.
இந்த ஹிஜாபை இனி அணியாதே, நம் மனதை அல்லாஹ் அறிவார்,  நம்மை மன்னிதுவிடுவார். இவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க என்று ஷாருக்கான் தம்பி தன் மனைவியிடம் சொல்லும்போது. தன் அடையாளத்தை இழக்கவேண்டியதின் வலியை உணர்த்துகிறது.

போலி முசல்மானின் மீது நீ பொய் சொல்றே, சைத்தான் என்று கூறி மூணு முறை கல் எரியும் போதும்.
இழந்த ஹிஜாபை மீண்டும் அணிந்து வந்து இது என் அடையாளம், இதற்காகத்தான் போராடுகிறேன் என்று சொல்லும் இடத்திலும் சபாஷ்  போட வைக்கிறார் கரண் ஜோகர்.

இந்த படம் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றாலும் பெறாவிட்டாலும்,  அன்பு தான் வாழ்கையின் தாரக மந்திரம், உண்மையான அன்பு எதையும் வெல்லும் என்ற கருத்தை உணர்த்துகிறது.

மனசாட்சி உள்ள ஒவ்வொரு வரும் பார்க்கவேண்டிய படம்.

3 கருத்துகள்:

SHAHUL HAMEED சொன்னது…

VERY INTEREST WHEN U READ THIS INSTRUCTION.BUT LAST LINE IS VERY IMPORTANT OF OUR LIFE.INSHA ALLAH WE PRAY FOR U........

ANBUDAN
RAMEE$HAHUL
38301089

Asiya Omar சொன்னது…

பார்த்தாச்சு ஹுசைன்,நல்ல படம்,நல்ல இடுகை.பாராட்டுக்கள்.

ஹுஸைனம்மா சொன்னது…

நல்லா அருமையா, தெளிவா, கோர்வையா எழுதிருக்கீங்க. ஏன் தொடர்ந்து எழுதலை?

நேரம் கிடைக்கும்போது எழுதுங்க, இன்ஷா அல்லாஹ்.